சுவாமிகளின் பூர்வாசிரமம் 0 comments

தமிழ் நாட்டைச் சேர்ந்த காவேரிப் பட்டிணத்தில் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த திம்மண்ண பட்டர், கோபிகாம்பா என்ற தம்பதியருக்கு 1595 ஆம் ஆண்டில் திருமலை வெங்கடேஸ்வரன் அருளினால் வெங்கடநாதன் என்ற குழந்தை பிறந்தது. அவருடைய தந்தை அவருக்கு அக்ஷராப்பியாசம் செய்வித்த பொழுது 'ஓம்' என்ற ஒரு சிறு எழுத்தினால் எவ்வாறு எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளை அறிய முடியும் என்று வினவினார். தந்தை இறைவனை முழுமையாக ஓர் எழுத்தினால் அறிய வாய்ப்பில்லை என்ற அக்குழந்தையின் புரிந்துகொள்ளும் தன்மையை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். எட்டு வயதில் சித்திரை மாதத்தில் வெங்கடநாதனுக்கு உபநயனம் செய்விக்கப் பட்டது. அப்பொழுது அவனுடைய தந்தை அமரராகி விட்ட பொழுதும் வெங்கடநாதனுக்குத் தான் ஆதரவற்ற அனாதை என்ற உணர்வு தோன்றவில்லை. ஏனெனில் தன்னுடைய உண்மையான தந்தை நாராயணனே என்றும், இரு முறை பிறந்த (உபநயனம் இரண்டாம் பிறப்பாகக் கருதப்படுவதினால்) தன் தாய் காயத்திரி தேவியே என்ற ஆழ்ந்த நினைவும் அவனுடைய உள்ளத்தில் ஆழமாக வேர் விட்டிருந்தது.

வெங்கடநாதன் யஜுர் வேதத்தையும், மணி மஞ்சரியையும், ஹனுமத்வ விஜயத்தையும் மதுரையில் பயின்றான். ஆழ்நிலைத் தியானத்தில் அவனுக்கு இருந்த சக்தியினால் அவன் சந்தியா வந்தனம் செய்து சிதறிய நீரினால் உலர்ந்த விதை முளை விட்டது. வீணையைச் சிறப்பாகப் பயின்று வாசித்து 'வீணை' வெங்கடநாதன் என்றழைக்கப்பட்டான். சங்கீதப் பரம்பரையில் வந்த வெங்கடநாதன் வீணையைத் திறமையாகக் கையாண்டதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஏனெனில் அவனுடைய பெரிய தாத்தா விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு வீணை பயில்வித்து வந்தார். அவனுடைய தந்தை சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். மதுரை திரும்பிய பின்னர் அவருடைய சகோதரர் குரு ராஜாசார்யா மதுரையைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணுடன் வெங்கடநாதனின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

ஐம்புலன்களையும் அடக்க வல்ல வித்தகன் திருமணத்தைச் செய்து கொண்டாலும் கல்வி கற்கத் தடையே அன்று என்று சாஸ்திரங்களின் கூற்று வெங்கடநாதனைப் பொறுத்தவரை உண்மையே ஆயிற்று. கலைவாணியின் அருளால் வெங்கடநாதன் சரஸ்வதியை மணந்த பின்னரே அநேக கிரந்தங்களைக் கற்க முடிந்தது. அக்காலத்தில் அறிவுப் பெட்டகமாக விளங்கிய கும்பகோணம் சென்று ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் மாணவனாகச் சேர்ந்து கற்கத் துவங்கிய வெங்கடநாதர் நள்ளிரவைக் கடந்த பின்னரும் விழித்திருந்து அன்று தான் கற்ற பாடங்களுக்கு விளக்க உரையும், குறிப்புகளும் எழுதுவது வழக்கம். ஒரு முறை ராஜமன்னார் கோவிலில் ஒரு விவாதத்தில் பங்கு கொண்டு ஒரு மாயாவாதியைத் தோற்கடித்தார். அவருடைய வெற்றி முன்னரே எதிர்பார்க்கப் பட்டதென்றாலும் அவருடைய இலக்கணப் புலமையையும், அவரிடம் ஒளிர்ந்த அரிய வாதத் திறமையையும் கண்டு வியந்த சுதீந்திர தீர்த்தர் அவரை மஹா பாஷ்ய வெங்கடநாதாச்சாரியார் என்று அழைத்தார். குருவானவர் தர்க்கத்தின் சில நுணுக்கங்களையும் பயில்வித்தார். அவருக்கு லக்ஷ்மி நாராயணண் என்ற மகன் பிறந்தான். அவரும், அவர் குடும்பமும் வறுமையில் வாடிய பொழுதும் மாத்வ வேதாந்தத் தேனைச் சுவைத்து அதில் ஆழ்ந்த படியினால் எதற்கும், யாரிடமும் செல்வதுமில்லை எப்பொருளையும் யாசிப்பதும் இல்லை.

இந்த நிலையில் அவருடைய ஆசாரியர் சன்னியாச தீக்ஷயைப் பெறுமாறு வலியுறுத்துகிறார். சந்நியாசம் பெற்றால் மடத்தின் பொறுப்புக்களை ஏற்கவேண்டுமே என்று அவர் சற்று யோசித்த பொழுது வித்யா இலக்குமியே நேரில் தோன்றி அவரிடம் அவரைப் போன்ற வித்தகர்கள் ஸ்ரீ மத்வாச்சாரியரின் மத்வ வேதாந்தத்தின் நுண் பொருளை உரிய முறையில் பரவச் செய்யா விட்டால் மடம் அழிந்து விடும் என்றும், அறியாமை என்னும் மாயா வாதம் தர்க்க வாதத்தை அழித்து விடும் என்றும் அறிவுறுத்துகிறாள். அவருக்குள்ளும் ஒரு தெளிவு பிறக்கிறது. ஸ்ரீ சுதீந்திரர் துர்மதி வருடத்தில் (1621) பங்குனி மாதம் வளர் பிறையில் வெங்கடநாதனுக்குச் சன்யாச தீக்ஷ அளித்தார். அவருக்குப் புனிதமான ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமம் அளிக்கப்பட்டது.